"ஹலோ தலைவரே… மோடி அரசின் மத்திய பட்ஜெட்டை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் கடுமையா விமர்சனம் செய்திருக்காங்க?''”
"ஆமாம்பா, பட்ஜெட்ல தமிழகத்துக்கு மட்டுமில்ல, குறிப்பா எந்த மாநிலத்துக்குமே பெரிசா ஒண்ணுமில்லை. யாரையும் திருப்திபடுத்தாத பட்ஜெட்னு எதிர்க்கட்சித் தலைவர்கள் அபிப்ராயம் சொல்லியிருக்காங்க. இதனால தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் வேகமெடுத்திருக்கு. தனது அரசு தாக்கல்செய்யும் இடைக்கால பட்ஜெட்மீது எந்த எதிர்மறை விமர்சனங்களும் எழாதவாறு அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் சிறப்பா இருக்கணும்னு தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும், அதிகாரிகளிடமும் அறிவுறுத்தியிருக்காராம் முதல்வர் ஸ்டாலின்.''”
"தி.மு.க.வுக்கு காங்கிரஸ் தரும் நெருக்கடி இன்னும் முடிவுக்கு வந்தமாதிரி தெரியலை. ஒரே ரகளையாத்தான் இருக்குபோல?''”
’"ஆமாங்க தலைவரே,… தமிழக கதர்ச்சட்டைகளின் போர்க் குரலுக்கு முற்றுப்புள்ளி வைக்கணும்னு ராகுலை சந்திச்சு பேச்சுவார்த்தை நடத்தினார் கனிமொழி. அதுல, கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு ஆகிய விசயத்துல எந்த உறுதியையும் இப்போ தரமுடியாது. அதை இப்போ அறிவிச்சா கூட்டணிக்கு பலவீனமாகிடும். தேர்தலுக்குப்பிறகு பார்த்துக்கலாம்னு கனிமொழி சொல்லியிருக்காங்க. அதுக்கு ராகுல்காந்தி, எந்த பதிலையும் சொல்லலை. ஆனா, தொகுதிப் பங்கீடு பத்திப் பேச நாங்க குழு அமைக்கிறோம்; அதன்பிறகு பேசலாம்னு ஸ்டாலின் சொன்னாரு. ரெண்டு மாசம் ஆகியும் இன்னும் குழு அமைக் கலை. அப்படின்னா, காங்கிரஸுக்கு என்ன மரியாதை? தேர்தல் தேதி அறிவிக்கிறதுக்கு முன்னாலேயே தொகுதி உடன்பாடெல்லாம் உறுதி யானாத்தானே காங்கிரசும் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தமுடியும்? தி.மு.க. தரப்புல குழு அமைக்காம டிலே ஆகறதில எங்களுக்கு வருத்தம்னு ராகுல்காந்தி சொல்லியிருக்காரு. ராகுலின் அந்த வருத்தம் தி.மு.க. தலைமைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கு. விரைவில் பேச்சுவார்த்தைக் குழுவை ஸ்டாலின் அமைப்பாருன்னு எதிர்பார்த்துக்கிட்டிருக்கு காங்கிரஸ். இதுக்கு இடையில, காங்கிரசின் ஐவர் குழு தலைவர் கிரீஷ் சோடங்கருக்கு பதில் காங்கிரசின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி.வேணு கோபால், ஸ்டாலினைச் சந்திச்சி முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்துவாருன்னு காங்கிரசில் சொல்றாங்க. அதேசமயம், சென் னைக்கு வந்த கிரீஷ் சோடங்கர், காங்கிரஸ் சீனியர்களிடம் விவாதிச்சிருக்காரு. அப்போதும், கூட்டணி ஆட்சி இல்லைன்னா, கூட்டணியை மாத்துங் கன்னுதான் பலரும் வலி யுறுத்தியிருக்காங்களாம்.''”
"கரூர் விவகாரத்துல விஜய்க்கு மீண்டும் சி.பி.ஐ. சம்மன் அனுப்பலாம்னு செய்தி வருதே?''”
"கரூர் சம்பவத்துல சி.பி.ஐ. என்கொயரிக்குப் போயிட்டு வந்தாரு விஜய். இவருக்குமுன்பு என்கொய ரியை எதிர்கொண்ட த.வெ.க. பிரமுகர்கள் சொன்ன பதில்களையும், விஜய் சொன்ன பதில் களையும் அலசி, எங்கெங்கெல்லாம் முரண்பாடுகள் இருக்கு? எதெல்லாம் ஒத்துப்போகுதுன்னு சி.பி.ஐ. அதிகாரிகள் தொகுத்திருக்காங்களாம். முரண்பாடு கள் இருக்கிற பதில்களை வெச்சு, மீண்டும் ஒருமுறை விஜய்யை என்கொயரிக்கு அழைக்க லாமா? என சி.பி.ஐ. தரப்புல ஆலோசிக்கப் பட்டிருக்காம். ஆட்சி மேலிடம் உத்தரவிட்டால், மீண்டும் விஜய்க்கு சம்மன் அனுப்பப்படும் என சி.பி.ஐ. தரப்பில் தகவல் பரவிவருது. அதுமட்டுமல்ல, கரூர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அதிகாரிகள் சிலருக்கு சம்மன் அனுப்பவும் ஆலோசிக்கப்படுகிறது.''”
"முந்தைய எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில நடந்த ஸ்மார்ட் சிட்டி ஊழல் விவகாரத்துல மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக பா.ஜ.க. தலைமைக்கு புகார் போயிருக்காமே?''”
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/02/wrang2-2026-02-02-15-26-24.jpg)
"எடப்பாடி ஆட்சியில உள்ளாட்சித்துறை அமைச்சரா இருந்தாரு வேலுமணி. ஏகப்பட்ட ஊழல் புகார் இவர் மேலே இருக்கு. குறிப்பா, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம் உள்ளிட்ட 10 மாநகராட்சிகளில் ஸ்மார்ட் சிட்டி அமைக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. சுமார் 10,000 கோடி மதிப்பிலான திட்டம் இது. மத்திய அரசும் இதுக்கு நிதியுதவி செஞ்சது. இந்த திட் டத்துல பெரிய அளவுல மாஜி வேலுமணி ஊழல் செய்திருப்பதாக, 2022-ல் குற்றச் சாட்டு எழுந்தது. வேலுமணிக்கு எதிரான இந்த ஊழலை விசாரிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி டேவிதார் தலைமையில் கமிட்டி ஒன்றை அமைச்சாரு முதல்வர் ஸ்டாலின். மூணு மாதத்தில் தனது ரிப்போர்ட்டை தி.மு.க. அரசிடம் ஒப்ப டைச்சிட்டாரு டேவிதார். அந்த ரிப் போர்ட்டில், ஊழல் எப்படியெல்லாம் நடந்திருக்கு? வேலுமணி எப்படியெல்லாம் சம்பந்தப்பட்டிருக் காருன்னு விளக்கமா சொல்லப்பட்டிருக்காம். அந்த ரிப்போர்ட் வெளிவந்தா வேலுமணியின் அரசியல், ஆட்டம் கண்டுடும். இதை தெரிஞ்சுக்கிட்ட வேலுமணி, தனது சாதி அதிகாரிங்களை வெச்சு ரிப்போர்ட் வெளிவராம இப்போதுவரை தடுத்து வச்சிக்கிட்டிருக்கிறாராம். இதுதான் பா.ஜ.க. தலைமைக்கு புகாராக போயிருக்கிறது. எடப்பாடி யை வீழ்த்தி பா.ஜ.க.வின் உதவியுடன் அ.தி. மு.க.வை கைப்பற்றவும், முதலமைச்சராகவும் திட்டமிட்டுள்ள வேலுமணிக்கு இந்த புகார் சிக்கலை உருவாக்கலாம்னு சொல்றாங்க. வேலுமணியின் ஊழலைக் கிளறினா இன்னும் ஏகத்துக்கும் வரும். ஆனா, இவர் மீது வழக்குப் போட தி.மு.க. இன்னும் ஏன் தயங்குதுன்னுதான் தெரியலைங்கிறாங்க.''”
"என்னப்பா, மேட்டுப்பாளையம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடைபெற்ற தீண்டாமைக் கொடுமை பற்றிய நம்ம செய்தி அரசின் கவனத்துக்குப் போயிருக்குபோல?''…”
"ஆமாங்க தலைவரே, கடந்த இதழில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்துக்கழகம் கிளையில் பழங்குடி, பட்டிய-ன அதிகாரி அமர்ந்த இடத்தை, சாணி போட்டு மொழுகி தீண்டாமை மனப்பான்மை யுடன் செயல்பட்டது குறித்து பதிவிட்டிருந்தோம். இதன் எதிரொலியாக தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகத்தின் கோவை மண்டல சட்டப் பிரிவின் உதவி மேலாளர், சம்பந்தப்பட்டவங் களுக்கு பணி நீக்க உத்தரவு அனுப்பி, சஸ்பெண்ட் செய்துள்ளார். இது நக்கீரனுக்கு கிடைத்த வெற்றி தலைவரே.''”
"தென்காசி மாவட்ட தி.மு.க.வுல கோஷ்டிப்பூசல் சலசலப்பு கேட்குதே''
"தென்காசி மாவட்டம் வாசு தேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிக் குட்பட்ட குவளைக்கன்னி கிராமத் தில் புதிதாக ரேஷன் கடை கட்டப் பட்டுள்ளது. அதனைத் திறப்பதற்காக வாசுதேவநல்லூர் ம.தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினர் சதன் திருமலை குமார், சங்கரன்கோவில் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் சென்றனர். ம.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரை வழிமறித்த பாராளுமன்ற உறுப்பினர் ராணிஸ்ரீ குமார் ஆதரவாளரும், பஞ்சாயத்து தலைவருமான தினேஷ், "ஐந்து வருடம் நீங்கள் எங்கே போனீர்கள்? ஊர் பக்கமே வராத நீங்கள் ரேஷன் கடையை மட்டும் ஏன் திறக்கவந் தீங்க?'’என வாக்குவாதம் செய்ய, சதன் திருமலைக்குமார், "இந்த ஊருக்கு சமுதாய நலக்கூடம் என் நிதியில்தான் கட்டப்பட்டது' என்றார். மீண்டும் அந்த இடம் சலசலப்பாக, "விஷயத் தைப் பெரிசு ஆக்காதேப்பா'’என சட்டென இடைமறித்தார் சங்கரன் கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா. "அண்ணா இது உங்க தொகுதி கிடையாது, உங்க தொகுதியில் போய் வேலையைப் பாருங்க'’என வழியைக் காட்டினார், பஞ்சாயத்து தலைவரான தினேஷ். உடனே ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று, ‘"நீங்க எம்.பி.யை வைத்தே திறந்து வைத்துக்கொள் ளுங்கள்'’என கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்திருக்கிறார்கள் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரும், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும். விவரம்தெரிந்து தேர்தல் நேரத்தில் இந்தமாதிரி கோஷ்டி மனநிலையோடு அடிச்சுக்க லாமா என கட்சித் தலைமை அப்செட்டாகியுள்ளது.''
"தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், பள்ளிக் கல்வித்துறை செயலாளர், இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கே, என்ன விவகாரம்?''”
"நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அரவேனு உயர்நிலைப் பள்ளியில் படித்த பட்டியலியன மாணவி பத்தாம் வகுப்பில் மூன்று தேர்வில் தோல்வியடைந்த நிலையிலும், 2023-ஆம் ஆண்டு கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பதினொன்றாம் வகுப்பில் அம்மாணவியை சேர்த்துக்கொண்டார். அந்த மாணவி துணைத்தேர்விலும் இரண்டு பாடங்களில் தோல்வியுற்றார். தலைமை ஆசிரியையின் அஜாக் கிரதையால், அந்த மாணவியை 11-ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பில் தொடர அனுமதித்தார். அந்த மாணவி 11 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகளிலும் தேர்ச்சிபெற்றார். பின்னர் கல்லூரிச் சேர்க்கைக்காக சென்றபோது, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத தால், அரசு கல்லூரியில் மாணவியைச் சேர்க்க முடியாது என கூறிவிட்டனர். பின்னர் தலைமை யாசிரியை, கல்வி அதிகாரிகள் அந்த மாணவியின் எட்டாம் வகுப்புச் சான்றிதழை வைத்து, குன்னூரிலுள்ள அரசு ஐ.டி.ஐ.யில் சேர்த்துவிட்டு தப்பித்துக்கொண்டனர். இதனால் மாணவி படித்த இரண்டு ஆண்டுகள் வீணாய்ப்போனது, மாணவியின் உயர்கல்விக் கனவும் தகர்ந்தது. இந்த நிலையில், கல்வி அதிகாரிகள் அசட்டையாக இருந்தனர் மற்றும் மாணவிக்கான நீதியை வழங்கவில்லை என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு புகாரளித்தது. தற்போது தேசிய தாழ்த்தப்பட் டோர் ஆணையம் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகனுக்கும், பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பனுக்கும், மாணவி கல்வி விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னவென கேள்வி எழுப்பி, 15 நாட்களுக்குள் அறிக்கையளிக்குமாறு அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது. கொடுக்கப்பட்ட காலத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவில்லை என்றால், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்களை எச்சரித்துள்ளதாம்.''”
"ஹெச்.ராஜா உடல்நிலை சரியில்லாத விவகாரத்திலும் அரசியல் நடக்குதாமே?''”
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/02/wrang1-2026-02-02-15-26-45.jpg)
"ஆமாங்க தலைவரே, ஹெச்.ராஜாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதற்குக் காரணம் பா.ஜ.க. என்கிறார்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவ ர்களே. அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போன அன்று பனிரெண்டரையிலிருந்து மூன்று மணி வரை தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கூட்டம் நடந்துள்ளது. நயினார் நாகேந்திரன், தமிழிசை தலைமையில் நடந்த அந்தக் கூட்டத்தில் ஹெச்.ராஜாவுக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை. வழக்கமாக ஒரு மணிக்குச் சாப்பிடும் அவர் அன்று மூன்று மணிக்குத்தான் சாப்பிட்டிருக்கிறார். தாமதமாகச் சாப்பிட்டதும் பிரச்சனைக்கு காரணமாயிருக்கிறது. அதேபோல, இந்தியா டுடே கான்க்ளேவில், இந்துக்களின் பாதுகாவலர் எனச் சொல்பவர்கள் தமிழகத்தில் எட்டுக் கோடி இந்துக்களின் வாக்குகளை வாங்குவதற்கு தார்மீக உரிமையுள்ளதா?' என ஒருவர் பேச, அது அவரை இன்னும் டென்ஷனாக்கியுள்ளது. இதனால் மூளையில் ரத்தக்கட்டியுடனிருந்த அவருக்கு ஸ்ட்ரோக் வந்திருக்கிறது. இந்நிலையில் அங்கிருந்த ஹபீசுல்லா என்னும் தி.மு.க.காரரும் ஏ.என்.எஸ். பிரசாத் எனும் பா.ஜ.க.காரரும் சேர்ந்துதான் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறர்கள். துரைமுருகனைப் பார்க்கப் போன முதல்வர் ஸ்டாலின், அப்படியே ஹெச்.ராஜாவையும் பார்த்து நலம் விசாரித்து அரசியல் பண்பாட்டையும் வெளிப்படுத்தியிருக் கிறார். இந்த விவகாரத்தில் தமிழிசை சௌந்தர் ராஜன், ஏ.என்.எஸ்.பிரசாத்தான் ஹெச்.ராஜாவுக்கு எல்லா உதவியும் செய்தார். ஹபீசுல்லா எந்த உதவி யும் செய்யாமல் விளம்பரம் தேடிக்கொண்டிருக் கிறார் என விமர்சித்துள்ளது சர்ச்சையாகியிருக்கிறது.''
"தேர்தலை முன்னிட்டு வித்தியாசமான ஒரு யோசனையை தி.மு.க. முன்னெடுக்குதாமே?''”
"தி.மு.க. இந்தத் தேர்தலில் ஒரு சோசியல் எஞ்சினியரிங் வேலையைச் செய்யப்போகிறதாம். எல்லா கட்சிகளும் வன்னியர், தேவர், தேவேந்திர குல வேளாளர், பறையர் என எண்ணிக்கையில் அதிகமுள்ள பெரும்பான்மை சாதிகளைத் தேடிப் போக, தி.மு.க.வோ, அவர்களைவிட எண்ணிக் கையில் குறைவாக உள்ள சிறிய ஜாதிகளைத் தேடிப்போகிறார்கள். ஜி.டி. நாயுடு பெயரில் பாலம் அமைத்தது, பெரும்பிடுகு முத்தரையருக்கு ஸ்டாம்ப் வெளியிட்டது என நுணுக்கமான வேலைகளைச் செய்கிறது. ஒவ்வொரு தொகுதி யிலும் சின்னச் சின்ன ஜாதிகளின் தேவையென்ன எனப் பார்த்து தமிழகம் முழுவதும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவிட்டிருக்கிறது பென் அமைப்பு. இதனால் இந்த சோஷியல் என்ஜினியரிங் வேலைகளில் தி.மு.க.வினர் கவனம் செலுத்திவருகிறார்கள்.''”
"சரிப்பா, நானும் ஒரு விஷயம் சொல்லுறேன். விவசாயிகளின் நலனுக்காக விளை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை தருது ஒன்றிய அரசு. கடந்த 2024-25-ல மத்தியப்பிரதேசத்துல கடுகு, குவிண்டாலுக்கு 2,650 ரூபாய் நிர்ணயிச்சு விவசாயிங்ககிட்டயிருந்து வாங்கினாங்க. இந்நிலையில ம.பி. மாநிலத்தின் சாகர் மாவட்டத் துல ரேஹ்லியில ஒரு கிடங்குல அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதுல அங்கிருந்த கடுகுல 35, 40 சதவிகிதம் கடுகுபோலவே இருக்கும் களிமண் ணைக் கலப்படம் செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து இதில் தொடர்புடைய 5 அதி காரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள் ளது. இந்த ஒரு கிடங் கில் மட்டும் அரசுக்கு 1 கோடி நட்டமாம். கலப்படம் இந்த ஒரு கிடங்குல மட்டும்தான் நடந்ததா இல்லை மாநிலம் பூரா நடந்துச்சானு எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்க ஆளுங்கட்சி சைலண்டாயிடுச்சாம்.''
__________________
இறுதி சுற்று!
"டாப் இன்ஜின் நாம்தான்!'' -விஜய் பேச்சு!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/02/wrangbox-2026-02-02-15-27-02.jpg)
தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா, பனையூர் தலைமை அலுவலகத்தில் பிப்ரவரி 2, திங்களன்று நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில், பாடகர் வேல்முருகன் குழுவினரின் த.வெ.க. கொள்கைப் பாடலுக்கு விஜய்யும் அவரோடு சேர்ந்து ஆடி, கட்சியினரை உற்சாகப் படுத்தினார். தொடர்ந்து முனைவர் சுமதிஸ்ரீ, பத்திரிகையாளர் டி.எஸ்.எஸ்.மணி, கே.சி.மதிவாணன் ஆகியோர் பேசினார்கள்.
இவர்களைத் தொடர்ந்து பேசிய விஜய், "வெடியை கொளுத்திப் போடலாமா?'' என்று துவங்கி, 1977ஆம் ஆண்டு, தி.மு.க.வுக்கு எதிராக எம்.ஜி.ஆர். பேசியதை சுட்டிக்காட்டி, தி.மு.க.வை கடுமையாக விமர்சித்தார். "டப்பா என்ஜின் ஓடாத இன்ஜின் எவ்வளவு வந்தாலும் டாப் இன்ஜின் நாம்தான்'' என்றவர், "தமிழ்நாட்டு அரசியலில் விசில் ஊதி தீய சக்தியை ஓட்டணும், செயின்ட் ஜார்ஜ் கோட்டையை பிடிக்கணும்'' எனக்கூறி உரையை முடித்தார். நிகழ்ச்சியின் இறுதியில், சிறுபான்மை மக்களை கவரும் வகையில், கட்சியின் மகளிர் அணி நிர்வாகி தாவீரா, தூய அன்னை மாதா சிலையை விஜய்க்கு வழங்க, விஜய் பெற்றுக் கொண்டார்.
-அரவிந்த்
____________
"அதற்கென்ன செஞ்சிடலாமே..''
முதலமைச்சரைப் பாராட்டிய ப.சிதம்பரம்!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/02/wrangbox1-2026-02-02-15-27-26.jpg)
முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைப்பதற்காகவும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவும், இரண்டு நாட்கள் பயணமாக சிவகங்கை மாவட்டத்திற்கு வருகைதந்த முதலமைச்சர் முக.ஸ்டாலின், சிராவய-ல் காந்தி -ஜீவா சந்திப்பை நினைவுகூரும் வகையில் மணிமண்டபத்தை திறந்துவைத்ததோடு, குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழாவிலும் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
சனிக்கிழமையன்று, செட்டிநாட்டில் 330 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு 62 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங் களை திறந்துவைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்கத்துக்கு சி. சுப்பிரமணியம் பல்நோக்கு அரங்கம் என்று பெயர்சூட்டினார். தொடர்ந்து, முடிவுற்ற ஏனைய அரசுப்பணிகளை திறந்துவைத்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
முன்னதாக, மேடையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீற்றிருக்கும்போது மைக்பிடித்த காங்கிரஸின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ப.சிதம்பரம், "தி.மு.க. அரசு ஆட்சிப்பொறுப் பேற்றவுடனேயே முதலமைச்சரைச் சென்று பார்த்து பல கோரிக்கைகள் வைத்தேன். அமைதியாக அதனை உள்வாங்கிக்கொண்டு மறுப்பேதும் கூறாமல், ‘அதற்கென்ன செஞ்சிடலாமே?’ என்றார். அவர் கூறியதுபோல் செய்து காட்டியிருக்கிறார். அடுத்தும் அவர்தான் முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பிற்கு வருவார். அப்பொழுதும் அவரைச் சென்று பார்ப்பேன், கோரிக்கைகள் வைப்பேன். அப் பொழுதும், அதற்கென்ன செஞ்சிடாலாமே?’என்பார். சொன்னதுபோல் செய்தும்காட்டுவார்'' என பேச, தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் கொப்பளித்தது.
-நாகேந்திரன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/02/wrang-2026-02-02-15-26-07.jpg)